ஓம் ஸ்ரீ சாயிராம்!
இந்தப் புனிதமான புரட்டாசி மாதத்தில், ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்களில் சிலவற்றை “பிரேம பிரபந்தம்” தொடரில் சேவித்து வருகிறோம்.
பகவானின் அவதார லீலைகளை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர் மீது நம்பிக்கை வளர்கிறது. ஆனால், அந்த நம்பிக்கை என்றும் மாறாமல் இருப்பது எளிதல்ல. பக்தன் பகவானிடம் கொண்ட அன்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை, திருவஞ்சிக்களத்தில் பிறந்த சேர குல மன்னனான குலசேகர ஆழ்வார், தனது "பெருமாள் திருமொழி"யில் “வாளால் அறுத்துச் சுடினும்” என்னும் பாசுரத்தின் மூலம் எடுத்துரைக்கிறார்.
"பிறவி என்னும் பெருங்கடலில் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும், பல துன்பங்களுக்கு ஆளாகும் ஜீவனுக்குப் பகவானைத் தவிர வேறு புகலிடம் இல்லை!" என்னும் கருத்தை வலியுறுத்தும் பெருமாள் திருமொழியின் மற்றொரு பாசுரமான, “வெங்கட்டிண்களிறடர்த்தாய்…” என்னும் பாசுரத்தை இரண்டாவதாக இன்று அனுபவிக்கப் போகிறோம்.
வாருங்கள்! இந்தப் புரட்டாசி மாதத்தில் சாயி நாராயணனின் புகழைக் கேட்டும் பாடியும் நம் வாழ்வைப் பயனுள்ளதாக ஆக்குவோம்!